ஒரே நாளில் 462 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 462 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 April 2021 8:36 PM GMT (Updated: 21 April 2021 8:36 PM GMT)

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று 5612 பேருக்கு பரிசோதனை செய்தலில், புதிய உச்சமாக 462 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்

மதுரை
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று 5612 பேருக்கு பரிசோதனை செய்தலில், புதிய உச்சமாக 462 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா கடந்த ஆண்டை போல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி, ஜூன், ஜூலை, மாதங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதுபோல் தான் தமிழகத்தில் தற்போதும் கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு ஏறுமுகமாகவே இருக்கிறது. மதுரையில் நேற்றும் புதிய உச்சமாக 462 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 282 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் 831 பேரும், கண்காணிப்பு மையங்களில் 172 பேரும், மீதமுள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல், ஆயிரம் பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும் இருக்கிறார்கள்.
அதன்படி மதுரையில் இதுவரை 25 ஆயிரத்து 723 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 282 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 22 ஆயித்து 694 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2547 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு
மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்ட 56 வயது முதியவர் ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பாதிப்புடன் வேறு சில பாதிப்புகள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 482 ஆக உயர்ந்துள்ளது.மதுரையில் கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகள் இல்லாத நிலையில் தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கடந்த 10 தினங்களில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது மதுரை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாளொன்றுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை பரிசோதனைகள் செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 612 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இதுவரை 9 லட்சத்து 16 ஆயிரத்து 464 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றனர்.
 அதிகபட்ச பாதிப்பு
மதுரையில் இதுவரை அதிகபட்சமாக கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மதுரையில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளில் இதுவே அதிகமாக இருந்தது. ஆனால், மதுரையில் நேற்று பதிவான பாதிப்பு கிட்டத்தட்ட அதன் அருகிலேயே இருக்கிறது. அதாவது நேற்று மதுரையில் 462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 2-வது அலையின் தொடக்க நிலையே இவ்வளவு உச்சகட்டமாக இருந்தால், வரும் நாட்களில் மதுரையில் தினமும் ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Next Story