கலெக்டர் அலுவலகத்துக்கு நடனமாடியபடி ஊர்வலமாக வந்த கரகாட்ட கலைஞர்களால் பரபரப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நடனமாடியபடி ஊர்வலமாக வந்த கரகாட்ட கலைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் திருவிழா நடத்தப்படாததால் கரகாட்ட கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரகாட்ட கலைஞர்கள் தென்மண்டல அனைத்து கலை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பொன்பாண்டி, செயலாளர் தோட்டாக்குடி மாரியப்பன் மற்றும் நெல்லை மாவட்ட கிராமிய கரகாட்ட கலைஞர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ராஜா, செயலாளர் சுடலைமணி ஆகியோர் தலைமையில் நேற்று ஏராளமான கரகாட்ட கலைஞர்கள் நெல்லைக்கு வந்தனர்.
வண்ணார்பேட்டையில் இருந்து பெண் கரகாட்ட கலைஞர்கள் தங்கள் தலையில் கரகம் எடுத்து ஊர்வலமாக நடனமாடியபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். மயிலாட்டமும் இதில் இடம் பெற்றது.
அவர்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் மறித்து உள்ளே செல்லக்கூடாது என்று கூறினர். அவர்கள், போலீசாரிடம் கெஞ்சி தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் என்று கூறி கதறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கரகாட்ட கலைஞர்கள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
தென் மண்டலத்தில் ஆயிரக்கணக்கான கிராம கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த கோவில் திருவிழாக்களின்போது இயல், இசை, நாடகம், கிராமிய கலைகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்துகின்றனர்.
இந்த கலை நிகழ்ச்சிகள் மூலம் வரும் வருவாயை நம்பி பல கலைஞர்களின் குடும்பம் வாழ்ந்து வருகின்றன. கலை நிகழ்ச்சிகள் முன்பு இரவு 8 மணிக்கு மேல் தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடப்பது வழக்கம். கிராமப்புற மக்கள் இந்த கலை நிகழ்ச்சிகளை அதிகம் விரும்புகின்றனர். கலை நிகழ்ச்சியை வைத்து தான் எங்களுடைய வாழ்வாதாரம் அமைந்துள்ளது.
நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த நிலையில் கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு கிராம கோவில்களில் திருவிழா நடத்துவதற்கும், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கிராம கோவில்களில் திருவிழா நடத்துவதற்கும், கிராமிய நிகழ்ச்சிகள் இரவு 2 மணி வரை நடத்துவதற்கும் அனுமதி வழங்க வேண்டும் அல்லது அனைத்து கிராமியக் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணமாக மாதம் ரூ.10 ஆயிரம், ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும். தங்கள் கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற முடியாத பட்சத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் அல்லது கலைஞர்கள் ஊர், ஊராக கலைநிகழ்ச்சி நடத்தி பிச்சை எடுக்க அனுமதி வழங்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மனு கொடுத்துவிட்டு வந்த கரகாட்ட கலைஞர்கள் பலர் இந்த திருவிழாக்களை நம்பி நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிக்கு செல்ல முடியாததால் ஐந்து கரகாட்ட கலைஞர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனே நடவடிக்கை வேண்டும் என்று கூறி கதறி அழுதனர்.
Related Tags :
Next Story