வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொம்மை வியாபாரிகள்


வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொம்மை வியாபாரிகள்
x
தினத்தந்தி 22 April 2021 2:26 AM IST (Updated: 22 April 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பெரியகோவில், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பொம்மை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதால் குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்

தஞ்சாவூர்;
கொரோனா தொற்றால் பெரியகோவில், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பொம்மை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதால் குறைந்தபட்ச ஊதியம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
தலையாட்டி பொம்மை 
சோழர் காலம் முதல் பாரம்பரிய கலைகளின் பிறப்பிடமாகவும், கலைகளுக்கு புகழ் பெற்ற இடமாகவும் தஞ்சை விளங்குகிறது. வீணை, ஓவியங்கள், கலைத்தட்டுகள் வரிசையில் தலையாட்டி பொம்மையும் தஞ்சையின் கலை பொக்கி‌‌ஷத்திற்கு சான்றாக விளங்கி வருகிறது. தஞ்சை என்றாலே பெரியகோவிலுக்கு அடுத்து நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மைகள் தான். தஞ்சை தலையாட்டி பொம்மைகள் வெளிநாடுகளுக்கு பயணித்த காலம் போய் தற்போது உள்ளூரிலேயே கேட்பாரில்லை. அதற்கு காரணம் கொரோனா தான் என்றால் மிகையல்ல.
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாக தஞ்சை மாவட்டம் திகழ்கின்றது. இங்கு மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியகோவில் உள்ளது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இந்த கோவில் திகழ்ந்து வருகிறது. இது தவிர தஞ்சை அரண்மனை, அருங்காட்சியகம், கல்லணை, மனோரா போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன.
பெரியகோவில் 
இது தவிர பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களும் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தஞ்சைக்கு வந்த வண்ணம் இருப்பர்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகஅரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ளது. மத்தியஅரசானது தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருங்காட்சியகங்கள், கோவில்களை மூட உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் தஞ்சைக்கு வருவது இல்லை. தஞ்சையில் உள்ள அரண்மனை, கலைக்கூடம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் நேற்றுமுதல் மூடப்பட்டன.
வியாபாரிகள் பாதிப்பு 
தஞ்சை பெரியகோவில், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் தஞ்சை பகுதியில் உள்ள தலையாட்டி பொம்மை விற்கும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தஞ்சை மாரியம்மன்கோவில் பகுதியில் தயார் செய்யப்படும் தலையாட்டி பொம்மைகள், கொலு பொம்மைகள் மற்றும் சென்னை பகுதியில் தயார் செய்யப்படும் டான்சிங்டால் பொம்மைகளை வாங்கி வந்து விற்பனை செய்வார்கள்.
தஞ்சை பெரியகோவில் அருகே சோழன்சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் தள்ளுவண்டியில் தலையாட்டி பொம்மைகளை வைத்து 33 வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். வழக்கமான நாட்களில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பொம்மைகளை விரும்பி வாங்கி செல்வார்கள்.
தினமும் நடைபெறும் வியாபாரம் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் இந்த வியாபாரிகள் அனைவரும் தங்களது குடும்பத்தை நடத்தி வந்தனர். ஆனால் பெரியகோவில் மூடப்பட்டது, புதிய கட்டுப்பாடுகள் காரணமாக பொம்மை வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்திருந்தும் யாரும் பொம்மைகளை வாங்க வரவில்லை. யாராவது பொம்மைகளை வாங்க வருவார்களா? என்ற ஏக்கத்துடன் வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்து காத்திருக்கும் நிலை தான் உள்ளது.
எதிர்பார்ப்பு 
வியாபாரம் நடைபெறாததால் பல வியாபாரிகள் பொம்மைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டனர். ஒருசிலர் மட்டுமே வியாபாரம் செய்து வருகின்றனர். அதுவும் வழக்கமான வியாபாரம் இல்லாததால் பொம்மை வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா முதல் அலையின் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மெல்ல மீண்டு வந்த நிலையில் மீண்டும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழகஅரசு முன்வர வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து பொம்மை வியாபாரி ராஜன் கூறும்போது, வழக்கமான நாட்களில் தினமும் ரூ.4 ஆயிரம் வரை வருமானம் வந்த நிலையில் தற்போது ரூ.100-க்கு கூட வியாபாரம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு 6 மாதங்களாக கடைகளை திறக்கவில்லை. தற்போது கடைகளை திறந்தும் வியாபாரம் இல்லை. எனவே அரசு குறைந்தபட்ச ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளால் நாங்கள் விழிபிதுங்கி நிற்கிறோம். அடுத்தவேளை உணவுக்கே தவித்து கொண்டு இருக்கிறோம் என்றார்.

Next Story