இரவு ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு
இரவு ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்;
இரவு ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போலீசார் தீவிர கண்காணிப்பு
கொரோனா தொற்று பரவலை தடுக்க இரவுநேர ஊரடங்கு நேற்றுமுன்தினம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் இரவு 10 மணிக்கு மேல் பலர் மோட்டார் சைக்கிள்கள், கார்களில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்களை போலீசார் வழிமறித்து இனிமேல் இப்படி வரக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். தஞ்சை அண்ணாசிலை, தொம்பன்குடிசை, கோடியம்மன்கோவில் முன்பு, பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக சோதனைசாவடிகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
தஞ்சை அண்ணாசிலை முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சாலையின் குறுக்கே இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய், மோட்டார் சைக்கிள்கள், கார்களில் வருபவர்களை வழிமறித்து இனிமேல் இதுபோன்று வரக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் முதல்நாளை ஒப்பிடும்போது 2-வது நாள் இரவு நேர ஊரடங்கில் குறைவான அளவே மக்கள் நடமாட்டம் உள்ளது. அரசு அறிவித்துள்ள இரவுநேர ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
வழக்குப்பதிவு
முதல் 2 நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் இரவுநேர ஊரடங்கை மீறுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அறிவுரை கூறி அனுப்பி வைக்கிறோம். அடுத்த 2 நாட்கள் இரவுநேர ஊரடங்கு நேரத்தில் வரும் வாகனங்களை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். அதையும் மீறி அடுத்ததாக வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் மக்கள் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். கடந்த 3 வாரங்களாக வாகனசோதனை நடத்தி, முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், வழக்குகளும் பதிவு செய்துள்ளோம். 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபராதமாக ரூ.1 கோடியே 87 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. எங்களது உயிரை பணயம் வைத்து நாங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறோம். எனவே மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story