அரியலூர்-ஜெயங்கொண்டம் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 27 சுற்றுகளாக எண்ணப்படுகிறது
அரியலூர்-ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 27 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.
அரியலூர்:
ஆலோசனை கூட்டம்
அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரத்னா தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாக்குகள் அனைத்தும் வருகிற 2-ந்தேதி எண்ணப்பட உள்ளன.
14 மேஜைகள் அமைக்கப்பட்டு...
இதில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட பிறகு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, 27 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. வாக்கு எண்ணும் நடைமுறைகள் முழுவதுமாக கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படவுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் பணிகளில் ஒவ்வொரு மேஜைக்கும் தாசில்தார் நிலையில் ஒரு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் மற்றும் 2 வாக்கு எண்ணும் உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், அந்தந்த தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால், அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விவரம் அறிவிப்பு பலகையில் எழுதப்படும். ஒவ்வொரு சுற்றுக்கான விவரம் அந்தந்த வேட்பாளர் முகவர்களுக்கு வழங்கப்படும். இந்த விவரங்கள் ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
கொரோனா பரிசோதனை
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன்களை கண்டிப்பாக கொண்டு செல்லக்கூடாது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் அவர்களுடைய அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும். வாக்கு எண்ணிக்கை அன்று காலை 8 மணிக்கு முன்பு வரை பெறப்படும் அனைத்து தபால் வாக்குச்சீட்டுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரி மேஜையில் எண்ணப்படும். மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க அனைத்து வேட்பாளர்கள், முதன்மை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கட்டாயம் ஆர்.டி.- பி.சி.ஆர். கொரோனா பரிசோதனையினை வருகிற 30-ந்தேதியன்று கண்டிப்பாக மேற்கொண்டு, கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு வருகை தரும் அனைத்து நபர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை சுமுகமாக நடத்திட அனைத்து நபர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயினுலாபுதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்) உள்ளிட்டோருடன் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story