10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்உற்பத்திக்கு வாய்ப்பு


10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்உற்பத்திக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 22 April 2021 3:19 AM IST (Updated: 22 April 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்உற்பத்திக்கு வாய்ப்பு

கோவை 

தமிழகம் முழுவதும் காற்றாலை சீசன் தொடங்கி உள்ளதால் 10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியாக வாய்ப்பு இருப்பதாக காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கூறினார்.

காற்றாலை உற்பத்தி சீசன்

தமிழகம் முழுவதும் நடப்பாண்டிற்கான காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி உள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை மின் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.

 இந்தியா முழுவதும் 38 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி கட்டமைப்பு உள்ளது. இதில் தமிழகத்தில் 9,500 மெகாவாட் மின் உற்பத்தி கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.


பொதுவாக ஆண்டு தோறும் காற்றாலை மின் உற்பத்தி சீசன் மே கடைசியில் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும். ஆனால் கடந்த சில வருடங்களாக சீசன் முன்னரே தொடங்கிவிடுகிறது.
நடப்பு ஆண்டுக்கான சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியுள்ளது.

காற்றின் வேகம் மாறுபடுகிறது

இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரிரங்கையன் கூறியதாவது:

இந்த ஆண்டு காற்று சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியது. ஆனால் இன்று வரை சீரான முறையில் காற்று வீசுவதில்லை. ஒவ்வொரு நாளும் காற்றின் வேகம் மாறுபடுகிறது. 

இதனால் நிலையான மின் உற்பத்தி உறுதி செய்ய முடியவில்லை. எதிர்வரும் நாட்களில் சீரான முறையில் காற்று வீசத் தொடங்கும். அதனால் மின் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும். கடந்த ஆண்டு சீசனில் 10 ஆயிரத்து 816 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

10 ஆயிரம் மில்லியன் யூனிட்

இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. சீசன் தொடங்கி உள்ளதால் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story