தினமும் 10 விமானங்கள் மட்டுமே இயக்கம்


தினமும் 10 விமானங்கள் மட்டுமே இயக்கம்
x
தினத்தந்தி 22 April 2021 3:24 AM IST (Updated: 22 April 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

தினமும் 10 விமானங்கள் மட்டுமே இயக்கம்

கோவை

கோவை விமான நிலையத்தில் தினமும் 10 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

கொரோனா பரவல்

கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா 2-வது அலை காரணமாக விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது இதன் காரணமாக பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட விமான சேவையை சில நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதனால் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது

எண்ணிக்கை குறைப்பு

கொரோனா நோய் பரவல் முதல் அலை காரணமாக கடந்த ஆண்டு மே மாதத்தில் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தொற்று  குறையத் தொடங்கியதால் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் தினமும் 20 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா 2-ம் அலை வேகமெடுத்து உள்ளதால், கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சர்வீஸ் வழங்கி வந்த சில ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தற்காலிகமாக தங்களின் சேவையை நிறுத்தி வைத்துள்ளன.

 தற்போது டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால் அந்த நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களும் சீராக இயக்கப்படாத ஒரு சூழல் நிலவுகிறது. இது விமான இயக்கத்தை கடுமையாக பாதித்துள்ளது. 

கோவை விமான நிலையத்தில் தினமும் 10 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஒரு சில நாட்களில் மட்டும் இதன் எண்ணிக்கை 12 ஆக அதிகரிக்கிறது. 

நோய்த்தொற்று பரவல் குறைந்தால் மட்டுமே விமானங்கள் இயக்கம் அதிகரிக்கும். கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முன் கோவையில் தினமும் 33 முதல் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

எந்த பாதிப்பும் இல்லை

கோவை விமான நிலையத்தில் நோய்தொற்று பரவலுக்கு முன் வழக்கமாக இரவு 11 மணி வரை விமானங்கள் இயக்கப்படும். அதிகாலை 4 மணி முதல் மீண்டும் விமான சர்வீஸ் தொடங்கும்.

தற்போது, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே தினமும் இரவு 9 மணிக்கு மேல் எந்த விமானமும் புறப்படுவதும் இல்லை வேறு நகரங்களிலிருந்து கோவையில் தரையிறங்குவதும் இல்லை.

 எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு கோவை விமான நிலையத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story