சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் விசைத்தறிகளில் இரவு நேர உற்பத்தி நிறுத்தம்
ஒரு லட்சம் விசைத்தறிகளில் இரவு நேர உற்பத்தி நிறுத்தம்
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் விசைத்தறிகளில் இரவு நேர உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
விசைத்தறி கூடங்கள்
சேலம் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், குகை, தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி, நெத்திமேடு, எடப்பாடி, இளம்பிள்ளை, வேம்படிதாளம், ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன.
இங்கு பட்டு வேட்டி, சேலை, காட்டன் சேலை, துண்டு, கைலி உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து சேலம் பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிப்டுகள் அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதாவது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்டும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஒரு ஷிப்டும் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
வேலை இழப்பு
இந்தநிலையில் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள காரணத்தால் சேலம் மாவட்டத்தில் விசைத்தறியில் உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் காலை நேர ஷிப்டு மட்டுமே விசைத்தறிகள் இயக்கப்பட்டன. இரவு நேர ஷிப்டு இயக்கப்படவில்லை. இதனால் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 25 லட்சம் மீட்டரில் இருந்து, 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி ஆகும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கால் ஒரு லட்சத்துக்கும் ேமற்பட்ட விசைத்தறி கூடங்களில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story