இரவு நேர ஊரடங்கு அறிவிப்பால் சேலத்தில் இருந்து அதிகாலையில் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கம்
சேலத்தில் இருந்து அதிகாலையில் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கம்
சேலம்:
இரவு நேர ஊரடங்கு அறிவிப்பால் சேலத்தில் இருந்து அதிகாலையில் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், ஞாயிற்றுக்கிழமை எந்த வித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்குள் ஜவுளி, நகைக்கடை, மளிகை கடைகள், ஓட்டல்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் சேலத்தில் கடை வீதி, செவ்வாய்ப்பேட்டை, பால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டன.
இரவு 10 மணிக்கு மேல் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டதால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடின. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
பஸ் நிலையம் வெறிச்சோடியது
அதேநேரத்தில், இரவு நேர ஊரடங்கை மீறி வாகனங்கள் ஏதும் இயக்கப்படுகிறதா? என்று சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேர ஊரடங்கு முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், வேலூர், ஈரோடு உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்கு சென்ற பஸ்களில் குறைவான பயணிகளே இருந்தனர். இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சேலத்தில் இருந்து தொலைதூரங்களில் உள்ள முக்கிய ஊர்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் அதிகாலை முதல் இயக்கப்படும் வகையிலும், இதுதவிர மாவட்டத்துக்குள் இயக்கப்படும் நகர் மற்றும் புறநகர் பஸ்கள் புறப்படும் நேர அட்டவணையும் சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டு அதன்படி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story