பஸ்களை தவற விட்டதால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு


பஸ்களை தவற விட்டதால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு
x
தினத்தந்தி 22 April 2021 4:22 AM IST (Updated: 22 April 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு

சேலம்:
பஸ்களை தவற விட்டதால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் பரிதவித்தனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
அதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக இரவு நேர ஊரடங்கையொட்டி இரவு 9 மணிக்கே பெரும்பாலான கடைகள் வழக்கம் போல் அடைக்கப்பட்டன.
சில இடங்களில் சிறிது காலதாமதமாக கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நீண்ட தூரம் வரை செல்லும் ஊர்களுக்கு காலையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு மாலை வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன.
பயணிகள் தவிப்பு
பஸ்களை தவறவிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிலையத்திலேயே நேற்று இரவு முழுவதும் தவித்தனர். அதிகாலையில் மீண்டும் பஸ்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அவர்கள் அங்கிருந்த நடைமேடைகளில் ஆங்காங்கே படுத்து தூங்கினர். கொசுக்கடியில் அவர்கள் பரிதவித்தனர்.
இரவு 10 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடின. இரவு நேர ஊரடங்கை மீறி சுற்றுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக மாநகரில் கலெக்டர் அலுவலகம் அருகே, அஸ்தம்பட்டி ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
2-வது நாள் என்பதால் ஊரடங்கு உத்தரவை மீறி வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்ததுடன் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story