ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்தப்பட்ட 25 கிலோ கஞ்சா சிக்கியது கேரள வாலிபர்கள் 5 பேர் கைது


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்தப்பட்ட 25 கிலோ கஞ்சா சிக்கியது கேரள வாலிபர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 April 2021 1:07 AM GMT (Updated: 22 April 2021 1:07 AM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக கேரள வாலிபர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர்.

5 பேர் கைது

அப்போது, அந்த பஸ்சில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 4 பைகளில் 12 பாக்கெட்டுகளில் மொத்தம் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்ததாக கேரள மாநிலம் பாலக்கோட்டை சேர்ந்த அப்துல் ரோஷன் (வயது 24), அம்சார் (24), யாசின் சாஜர் (29), மலப்புரத்தை சேர்ந்த முகமது ஆசிப் (21) மற்றும் மர்சூர்க் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சில், 2 பைகளில் மொத்தம் 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள மானம்பதி கண்டிகை கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் (31), அருளானந்தம் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story