தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது ெசய்யப்பட்டனர்.
பெண் கொலை
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை அருகே உள்ள சிந்தலக்கட்டை முருகையாநகர் பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் சேகர் என்ற கொம்பன் (வயது 55). கடந்த மாதம் சொத்து பிரச்சினை காரணமாக அவருடைய சகோதரரான சின்னதுரை மனைவி ராமலெட்சுமி (40) என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொம்பனை கைது செய்தனர். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரு்க்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
கொலை முயற்சி
மேலும் கடந்த மாதம் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பாலதண்டாயுத நகரை சேர்ந்த அஜய் என்ற மாடசாமி (40) மற்றும் சண்முக விக்னேஷ் என்ற விக்னேஷ் (23) ஆகியோர், 1-ம் கேட் காந்தி சிலை அருகே வந்துகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் பணம் தராததால் அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடபாகம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
அதுபோல் கடந்த மாதம் தூத்துக்குடி ஆனந்தா நகரை சேர்ந்த அப்பு என்ற அப்பன்ராஜ் (31) என்பவர் டேவிஸ்புரம் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அரிவாளை காட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பன்ராஜை கைது செய்தனர். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
மேற்படி இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரின் அறிக்கையின் அடிப்படையில் கொமபன், அப்பன்ராஜ், அஜய், விக்னேஷ் ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்க்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் அந்த 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்களை பாளையங்கோட்டை ஜெயிலில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story