கோவில்பட்டியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வணிகர்கள் முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தல்


கோவில்பட்டியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வணிகர்கள்  முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 April 2021 4:45 PM IST (Updated: 22 April 2021 4:45 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை வணிகர்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி வணிகர்கள், அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கு குறித்து கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா முன்னிலை வகித்தார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை...
கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகையில்,‘ 
கொரோனா 2-வது அலையின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை அனைத்து வணிகர்களும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், அவ்வப்போது சானிடைசர் பயன்படுத்துவதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
கடை மற்றும் நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். ஞாயிற்று கிழமைகளில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அன்றைய தினம் ஓட்டல்கள் மட்டும் திறந்து இருக்கலாம். பார்சல்கள் மட்டுமே வழங்க வேண்டும்
மேலும், போக்குவரத்து விதிமீறல், ரவுடிசம், கஞ்சா, தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்த தகவல்கள் இருந்தால் உடனடியாக என்னை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப் போரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்’ என்று பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தொழில் வர்த்தக சங்க தலைவர் ஏ.பி.கே. பழனி செல்வம், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென் மண்டல செயலாளர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சமுதாய தலைவர்கள் தெய்வேந்திரன், சண்முக சுந்தரம், மார்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன், எஸ்.ஆர்.பாஸ்கரன், ஏற்றுமதி, இறக்குமதி தொழிற் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story