வேலூர் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 336 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 336 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர்
கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். எனவே சிறப்பு மையங்கள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
தினமும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று வெளியான முடிவில் மாவட்டம் முழுவதும் 336 பேருக்கு பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த பட்டியலில் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாதிப்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதவிர அங்கு பணிபுரியும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்பட 28 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே போலீஸ் நிலையத்தில் புகார் மனு பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மனு அளிக்க வசதியாக போலீஸ் நிலையம் முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, மேசைகள் போடப்பட்டுள்ளது.
24 ஆயிரத்தை கடந்தது
காட்பாடி காங்கேயநல்லூர் செல்லும் வழியில் உள்ள முனிசிபல் காலனி தெருவில் ஒருகுடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் கிருமிநாசினி அடித்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் அந்த தெருவில் வேறுயாரும் செல்லாத வகையில் தகரத்தால் அடைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் 297 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று 300 பேரை தாண்டி 336 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி பகுதியில் மட்டும் 100 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் வடமாநிலத்தவர்களும் அடங்கும். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 24 ஆயிரத்து 196 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணியவேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story