திருப்பத்தூர் அருகே சித்த மருத்துவ கொரோனா சிறப்பு மையத்தில் 22 பேருக்கு சிகிச்சை
திருப்பத்தூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிறப்பு மையத்தில் 22 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
திருப்பத்தூர்
சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஆண்டு கலெக்டர் உத்கரவின்பேரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இங்கு 612 பேர் சிகிச்சைபெற்று குணமடைந்து திரும்பினர்.
அதன் பின்னர் தொற்று பரவல் குறைந்துவிட்டதால் சிகிச்சை மையம் மூடப்பட்டது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் 22 பேர் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சித்த மருத்துவ பிரிவு டாக்டர் விக்ரம் குமார் கூறியதாவது:-
ஆவி பிடித்தல்
கடந்த ஆண்டைப் போல தற்போதும் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு நோயாளிகளுக்கு இங்கு புதிதாக மூலிகை பந்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை பந்தலில் சோம்பு கசாயம், சீரக குடிநீர், ஆடாதொடை கசாயம் உள்ளிட்டவைகளை மண் பானைகளில் வைத்து வழங்கப்பட்டு வருகிறது.
இதனை குடிப்பதால் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் நீங்குகிறது, மேலும் இங்கு கொரோனா நோயாளிகளுக்கு மூலிகை கலந்த ஆவி நீர் பிடித்தல், நிலாச்சோறு, சித்த மாத்திரைகள், கபசுர குடிநீர், அமுக்குரா சூரணம், தாளிசாதி வடாகம், அதிமதுர சூரணம் வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் மனச்சோர்வு அடையாமல் இருக்க அவர்களுக்கு இசையுடன் நடனம் ஆட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story