கொரோனா விதிமுறைகளை மீறியதாக நீலகிரியில் 4,262 வழக்குகள் பதிவு
கொரோனா விதிமுறைகளை மீறியதாக நீலகிரியில் 4,262 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை சார்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறியதாவது:-
நீலகிரியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முகக்கவசம் அணியாமல் இருப்பது போன்ற கொரோனா விதிமுறைகளை மீறியதாக கடந்த 1-ந் தேதி முதல் இதுவரை 4,262 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் 5 உட் கோட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அனைத்து போலீசாருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், மாவட்ட எல்லைகளில் உள்ள பர்லியார், குஞ்சப்பனை, கக்கநல்லா மற்றும் கேரள மாநில எல்லையை ஒட்டிய சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சுற்றுலா சம்பந்தமாக வருகிறவர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. அவசிய காரணங்களுக்காக வருகிறவர்கள் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
சமூக வலைதளங்களில் தங்களுக்கு பரிசு விழுந்து உள்ளது, பணம் செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. இதை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். இந்த மோசடி குறித்து புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story