கேரளாவில் இருந்து வால்பாறைக்கு வாகனங்கள் செல்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் இருந்து வால்பாறைக்கு வாகனங்கள் செல்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை,
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடியில் காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வால்பாறைக்கு வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
தமிழக-கேரள எல்லையான மளுக்கப்பாறை பகுதியில் கேரள மாநில ஆயுதப்படை போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வால்பாறைக்கும், வால்பாறையில் இருந்து கேரளாவுக்கும் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
ஆனால் மளுக்கப்பாறையை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்காக சோலையார் அணை பகுதிக்கு வர வேண்டி உள்ளது. அவர்களை மட்டும் உரிய சோதனைக்கு பிறகு கேரள போலீசார் அனுமதிக்கின்றனர்.
வால்பாறைக்கு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவர்கள் சோலையார் அணை உள்பட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு செல்வார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவலால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.
இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் அவர்களை நம்பி பிழைப்பு நடத்தி வந்த வியாபாரிகள் வருமானமின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த கடைகள் மூடி கிடக்கின்றன.
Related Tags :
Next Story