நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா


நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா
x
தினத்தந்தி 22 April 2021 8:53 PM IST (Updated: 22 April 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்

திண்டுக்கல்:

சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்பட்டி ஊராட்சி கோட்டைக்காரன்பட்டியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 6 ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் ஆக்கிரமிப்பு காரணமாக கோட்டைக்காரன்பட்டி பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் கோட்டைக்காரன்பட்டி கிராமத்துக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் இருந்தனர். ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அதிகாரிகள் வந்த சிறிது நேரத்திலேயே ஆக்கிரமிப்பை அகற்றாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். 

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
----------

Next Story