சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தேனி:
கம்பம் சுருளிப்பட்டி சாலையை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி, விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை அங்குள்ள ஒரு கோவிலுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது சிறுமியின் உடலில் கடித்து காயப்படுத்தினார். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டினார்.
இந்தநிலையில் சிறுமிக்கு ஏற்பட்ட காயம் குறித்து அவளுடைய தாயார் விசாரித்தார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை கூறினார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழும், இந்திய தண்டனை சட்டம் 506 (1)-ன் (கொலை மிரட்டல்) கீழும் போலீசார் வழக்குப்பதிந்து நாச்சிமுத்துவை கைது செய்தனர்.
5 ஆண்டு சிறை
இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி நாச்சிமுத்துக்கு, சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 6 மாதம் சிறை தண்டனையும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நாச்சிமுத்துவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story