இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது கடத்தல் சம்பவத்தில் திடீர் திருப்பம்


இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி  ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது  கடத்தல் சம்பவத்தில் திடீர் திருப்பம்
x
தினத்தந்தி 22 April 2021 9:18 PM IST (Updated: 22 April 2021 9:18 PM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் உரிமையாளர் கடத்தல் சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ரியல் எஸ்டேட் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம், 

கடத்தல்

சென்னை வடபழனி பகுதியில் வசித்து வருபவர் சிவன் (வயது 47). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவர் கடந்த 18-ந்தேதி மாலை விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்த மழவந்தாங்கல் பகுதியில் இடம் பார்க்க வந்தபோது அவரை காரில் வந்த ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பசும்பொன் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான நாகராஜ் (53), சென்னை திருநின்றவூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த செந்தில்நாதன் (42), திருநின்றவூர் நாச்சியார்சத்திரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (32), காங்கேயத்தை அடுத்த முத்தூர் புதுப்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்கிற ஓட்டகாது செந்தில் (47), அவரது மனைவி சத்யா (34) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து கடத்தப்பட்ட சிவனை மீட்டனர்.

திடீர் திருப்பம்

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கித்தருவதாக கூறி நாகராஜிடம் இருந்து சிவன் ரூ.6 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால் இதுவரை இரிடியத்தையும் கொடுக்கவில்லை, ரூ.6 லட்சத்தையும் நாகராஜிக்கு சிவன் கொடுக்காததால் நாகராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவனை கடத்தியது தெரியவந்தது. 
தொடர்ந்து, கைதான நாகராஜ் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தற்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிவனை பணம் மோசடி செய்த புகார் தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-

ரூ.12 லட்சம் மோசடி

சென்னை திருநின்றவூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த செந்தில்நாதன் (42) என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவன் அறிமுகமாகியுள்ளார். அப்போது சிவன், தான் தனக்கு தெரிந்த சிலரிடம் இருந்து இரிடியம் வாங்கி விற்பனை செய்து வருவதாகவும், இதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய செந்தில்நாதன், தனக்கு இரிடியம் வாங்கித்தரும்படி சிவனிடம் கேட்டுள்ளார். அதற்காக ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை ஒரு தவணையாகவும், மற்றொரு தவணையாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தையும் என ரூ.12 லட்சத்தை சிவனிடம் செந்தில்நாதன் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்ற சிவன், இதுவரை செந்தில்நாதனுக்கு இரிடியமும் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுபற்றி சிவனை செந்தில்நாதன் செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறிய சிவன், தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கொன்று விடுவதாக செந்தில்நாதனை மிரட்டியுள்ளார்.

ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது

இதுகுறித்து செந்தில்நாதன், கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் சிவன் மீது நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story