தேனியில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கலெக்டர் தலைமையில் பயிற்சி வகுப்பு
தேனியில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கலெக்டர் தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது.
தேனி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி எண்ணப்படுகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இந்த பணிகளுக்காக வாக்கு எண்ணும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு தேனியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளில் எந்த மேஜையில் பணியாற்றிட வேண்டும் என்பது குறித்து அன்று காலை 5 மணியளவில் கணினி கலக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பின், எந்த மேஜையில் பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து காலை 6 மணிக்கு கணினி கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். எனவே காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வர வேண்டும். தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
சரிபார்த்தல்
ஒரு சுற்றுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து எடுக்கப்பட்டவுடன் அடுத்த சுற்றுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்படும். வாக்கு எண்ணும் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் இறுதி வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜையை தவிர்த்து வேறு எங்கும் செல்லக் கூடாது.
வாக்கு எண்ணிக்கையின் போது தங்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டது தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள பச்சை நிற அட்டையில் இருக்கும் எண்ணை 17சி படிவத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கான பொத்தானை அழுத்தியவுடன் முகவர்கள் காணும் வகையில் கட்டுப்பாட்டு கருவியை வைக்க வேண்டும். கட்டுப்பாட்டு கருவியில் வரும் முடிவுகளை கார்பன் தாள் வைத்து இரு பிரதிகள் தயாரித்து அதில் முகவர்களிடம் கையொப்பம் பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை குறிக்கப்பட்ட இரு பிரதிகளையும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் அதனை நகல் எடுத்து வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசண்முகம் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story