கடலூர் அருகே காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு பயிற்சி
கடலூர் அருகே காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை உயிரியல் முறையில் பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலூர்,
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மற்றும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கரும்பு பயிர்களை உயிரியல் முறையில் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பாதுகாப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் கடலூர் அடுத்த குணமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது.
இதற்கு கடலூர் வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி, சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் வன விலங்குகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இருப்பினும் குறைந்த செலவிலும், உயிரியல் முறையிலும் வரப்புகளில் சேக்பிளவர் (குசும்பா) எனப்படும் எண்ணெய்வித்து பயிர்கள் மற்றும் உயிர்வேலி மரங்களை வளர்ப்பதன் மூலம் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம் என்றார்.
இயற்கை விரட்டி
தொடர்ந்து அவர் கூறுகையில், காட்டுப்பன்றிகளை விளை நிலத்திற்குள் வராமல் விரட்டி அடிக்க, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்ட பிரத்தியேக திரவம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை விரட்டி திரவத்தின் செயல்திறன் 3 மாதங்கள் வரை நீடித்து இருப்பதால், பயன் உள்ளதாக அமைகிறது.
அதனை நெல், கேழ்வரகு, சூரியகாந்தி, பப்பாளி உள்ளிட்ட பயிர்களில் காட்டுப்பன்றி தாக்குதலை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 500 மில்லி லிட்டர் திரவம் தேவைப்படும். பயிர் செய்துள்ள நிலத்தை சுற்றி வரப்புகளில் 2 அடி உயரம் உள்ள குச்சிகளை 10 அடி தூரத்திற்கு ஒன்று என்ற வீதம் ஊன்றி, பிறகு ஒன்றரை அடி உயரத்தில் சணல் அல்லது கம்பி கொண்டு இணைத்து கட்ட வேண்டும். மேலும் இரண்டு குச்சிகளுக்கு நடுவில் ஒரு சிறிய டப்பாவை கட்டி, திரவத்தை 5 மில்லி லிட்டர் அளவில் ஊற்றி மூட வேண்டும்.
செயல்விளக்க பயிற்சி
அவ்வாறு செய்தால் மழைநீர் உட்புகுந்து மருந்தின் வீரியத்தை குறைக்காது. டப்பாக்களில் பக்கவாட்டு துளைகள் இடுவதால், அந்த திரவத்தின் வாசனை வெளிவந்து, காட்டுப்பன்றிகளை வயலில் வரவிடாமல் செய்கின்றன என்றார்.
இதையடுத்து வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன், உயிரியல் முறையில் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தார். இதில் உதவி வேளாண்மை அலுவலர் சிவமணி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story