வேளாங்கண்ணியில் கொரோனா கட்டுப்பாடுகளால் களையிழந்த வியாபாரம் 3-வது நாளாக வெறிச்சோடிய கடற்கரை


வேளாங்கண்ணியில் கொரோனா கட்டுப்பாடுகளால் களையிழந்த வியாபாரம் 3-வது நாளாக வெறிச்சோடிய கடற்கரை
x
தினத்தந்தி 22 April 2021 10:24 PM IST (Updated: 22 April 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் கொரோனா கட்டுப்பாடுகளால் வியாபாரம் களையிழந்து காணப்படுகிறது. நேற்று 3-வது நாளாக கடற்கரை வெறிச்சோடியது.

வேளாங்கண்ணி:-

வேளாங்கண்ணியில் கொரோனா கட்டுப்பாடுகளால் வியாபாரம் களையிழந்து காணப்படுகிறது. நேற்று 3-வது நாளாக கடற்கரை வெறிச்சோடியது. 

ஆரோக்கிய மாதா பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. வங்க கடலோரம் பிரமாண்ட கட்டிட கலை அம்சத்துடன் காட்சி அளிக்கும் பேராலயத்தை காண வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வருவது உண்டு. இந்த ஆலயத்தை கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கிறார்கள்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த பேராலயம் விடுமுறை காலங்களில் மட்டும் அல்லாமல் சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படும். பேராலயத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கடற்கரையில் விளையாடி மகிழ்வார்கள். கடற்கரைக்கு செல்லும் வழியில் ஏராளமான கடைகளும் உள்ளன. 

கொரோனா கட்டுப்பாடுகள்

சுற்றுலா பயணிகள் வருகை மட்டுமே வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த வியாபாரிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள், மத கூட்டங்கள் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதன் காரணமாக வேளாங்கண்ணி கடற்கரை கடந்த 20-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் கூடாதபடி கடலோர போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வியாபாரம் களையிழந்தது

இதன் காரணமாக நேற்று 3-வது நாளாக வேளாங்கண்ணி கடற்கரை  வெறிச்சோடி கிடந்தது. கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் வரத்து அறவே குறைந்து விட்டது. 
இதனால் வேளாங்கண்ணி கடற்கரையையொட்டி உள்ள கடை வீதி வெறிச்சோடி காணப்படுகிறது. வேளாங்கண்ணியில் ஓட்டல்கள், பேன்சி ஸ்டோர்கள், மெழுகுவர்த்தி விற்பனை கடைகளிலும் பொருட்கள் வாங்க ஆள் இல்லை. இதனால் அங்கு வழக்கமாக நடைபெறும் வியாபாரம் களையிழந்து காணப்படுகிறது. 

Next Story