ஒரேநாளில் 15 ஆயிரம் கொரோனா தடுப்பூசி வினியோகம்


ஒரேநாளில் 15 ஆயிரம் கொரோனா தடுப்பூசி வினியோகம்
x
தினத்தந்தி 22 April 2021 11:16 PM IST (Updated: 22 April 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டன. மேலும் இதுவரை அதிகம் பேருக்கு தடுப்பூசி போட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன.

கோவை

கோவையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டன. மேலும் இதுவரை அதிகம் பேருக்கு தடுப்பூசி போட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன.


கொரோனா தடுப்பூசி 

கோவை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் என 150-க்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 

ஆனால் கடந்த சில நாட்களாக தட்டுப்பாடு நிலவியதால் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்  கோவை மாவட்டத்துக்கு 46 ஆயிரத்து 270 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டன. 

அந்த தடுப்பூசிகள் கோவை ரேஸ்கோர்சில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன.

ஒரே நாளில் 15 ஆயிரம் டோஸ்

அந்த தடுப்பூசிகள்  அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகிக்கப்பட்டன. அதன்படி ஒரே நாளில் 15 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டன. 

தடுப்பூசிகள் எந்த அடிப்படையில் வினியோகிக்கப்பட்டன என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் இதுவரை எந்தெந்த அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார மையங்களில் அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டனவோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டன.

 குறிப்பாக இதுவரை ஆயிரம் முதல் 2 ஆயிரம் தடுப்பூசிகள் போட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் எவை எவை என்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. 


உறுதி செய்தபின் வினியோகம் 

சில மையங்களில் தடுப்பூசிகளை வாங்கி வைத்துக் கொண்டு நீண்ட நாட்களாக போடாமல் உள்ள மையங்கள் மற்றும் இதுவரை குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி போட்ட மையங்களுக்கு தடுப்பூசிகள் கொடுக்கப்படவில்லை. 

இதே போல தனியார் ஆஸ்பத்திரிகள் தடுப்பூசிகள் போட்டால் அதுபற்றிய விவரங்களை கோவின் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவேற்றம் செய்து அவர்களிடம் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்று இணையதளத்தில் உறுதி செய்த பின்னர் தான் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டன. 

கோவை மாவட்டத்தில்  ஒரே நாளில் 15 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டன. 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story