நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 35 காசுகள் சரிவு கறிக்கோழி விலையும் ரூ.14 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் ஒரே நாளில் முட்டை விலை 35 காசுகள் சரிவடைந்துள்ளதுடன், கறிக்கோழி விலையும் ரூ.14 குறைந்துள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 35 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக சரிவடைந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை- 475, ஐதராபாத்- 370, விஜயவாடா-430, மைசூரு- 474, மும்பை- 470, பெங்களூரு- 470, கொல்கத்தா- 450, டெல்லி- 394.
கறிக்கோழி விலை வீழ்ச்சி
முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.60 ஆக வீழ்ச்சி அடைந்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.94-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.14 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.80 ஆக சரிவடைந்து உள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.38 சரிவடைந்து இருப்பதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
முழு ஊரடங்கு
முட்டை விலை சரிவு குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது:-
வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் முட்டை விற்பனை குறைந்து வருகிறது. இதனால் பிற மண்டலங்களில் முட்டையின் கொள்முதல் விலை சரிவடைந்து வருகிறது. இதேபோல் தமிழகத்திலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதால், முட்டை விற்பனை சற்று குறைந்து உள்ளது. இதுவே முட்டை கொள்முதல் விலை குறைப்புக்கு காரணம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story