வெளி மார்க்கெட்டுக்கு காய்கறிகளை அனுப்ப முடியாமல் வியாபாரிகள் தவிப்பு
ஊரடங்கு காரணமாக வெளி மார்க்கெட்டுக்கு காய்கறிகளை அனுப்ப முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்
ஊரடங்கு காரணமாக வெளி மார்க்கெட்டுக்கு காய்கறிகளை அனுப்ப முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகிறார்கள்.
காய்கறி மார்க்கெட்
காய்கறி வியாபாரத்தில் மேட்டுப்பாளையம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் 75-க்கும் மேற்பட்ட காய்கறி மண்டிகள் உள்ளன.
இங்கு கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் உள்பட பல்வேறு காய்கறிகள் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது.
இங்கு ஏலம் முடிந்த பின்னர் காய்கறிகள் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளாவுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இரவில் அடைப்பு
இங்கு இரவு 1 மணி முதல் மறுநாள் பிற்பகல் 12 மணி வரை காய்கறிகள் வரும். அதன் பின்னர் மண்டிகளில் ஏலம் முடிந்த பின்னர் இரவு 11 மணி வரை காய்கறிகள் லாரிகளில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.
தற்போது கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் இங்குள்ள காய்கறி மண்டிகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டு, மார்க்கெட் நுழைவுவாயில் இரவு 10 மணிக்கு பூட்டப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்குதான் திறக்கப்படுகிறது.
இதைபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், மண்டிகள் அனைத்தும் அடைக்கப்பட உள்ளது.
காய்கறி அனுப்ப முடியாத நிலை
இதனால் நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் காய்கறி வரத்து முற்றிலும் பாதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வந்தால்தான் மற்ற பகுதிகளுக்கு இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட்டுக்கு காய்கறிகள் எதுவும் வராது. இதனால் வெளியூர்களுக்கு காய்கறி அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அதுபோன்று இரவு ஊரடங்கு இருப்பதால், பகலில் லாரிகளில் காய்கறிகளை உடனடியாக ஏற்ற முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகிறார்கள்.
இது குறித்து வியாபரிகள் கூறும்போது, ஞாயிற்றுக்கிழமை காய்கறி மார்க்கெட் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
அப்போதுதான் வெளிமார்க்கெட்டுக்கு காய்கறிகளை அனுப்பி வைக்க முடியும்.
எனவே அதற்கு அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும். மேலும் இரவு நேரத்தில்தான் லாரிகளில் காய்கறிகள் ஏற்றும் பணி நடக்கும். தற்போது பகலில் தான் ஏற்ற வேண்டும். இதனால் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story