ஓடும் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ஓடும் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 68). இவர் தனது மனைவி ஜெயந்தி(59), பேத்தி பவிக்கா மற்றும் ஒருவருடன் கும்பகோணத்தில் இருந்து சேலத்திற்கு நேற்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் சுரேந்தர் ஓட்டினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாச்சலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லாத்தூர் ஆயாக்குளம் ஏரி அருகே சென்றபோது காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். டிரைவர் உடனடியாக காரை சாலைேயாரத்தில் நிறுத்தினார். இதையடுத்து காரில் இருந்த அனைவரும் காரில் இருந்து இறங்கினர். தீ மேலும் பரவியதில் கார் கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. காரில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி.யில் கியாஸ் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. கார் தீப்பற்றி எரிய தொடங்கியவுடன் 5 பேரும் காரில் இருந்து இறங்கியதால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் தீப்பற்றி எரிந்தது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story