கூடுதல் செலவு செய்தும் நிலக்கடலை சாகுபடியில் மகசூல் குறைந்தது


கூடுதல் செலவு செய்தும் நிலக்கடலை சாகுபடியில் மகசூல் குறைந்தது
x
தினத்தந்தி 23 April 2021 1:47 AM IST (Updated: 23 April 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் பகுதியில் கூடுதல் செலவு செய்தும் நிலக்கடலை சாகுபடியில் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தா.பழூர்:

நிலக்கடலை சாகுபடி
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தப்படியாக மானாவாரி பயிராக அதிக அளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை உற்பத்தி விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் பெரிய அளவில் பயன்பாடாக உள்ளது.
காரைக்குறிச்சி, தா.பழூர், கோடங்குடி, சிந்தாமணி, இடங்கண்ணி, அனைக்குடம், நாயகனைப்பிரியாள், சோழமாதேவி, பொற்பொதிந்தநல்லூர், காடுவெட்டாங்குறிச்சி, இருகையூர், கார்குடி, நடுவலூர், வேணாநல்லூர் உள்ளிட்ட தா.பழூர் ஒன்றியத்தின் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
கூடுதல் செலவு
குஜராத் கட்ட கடலை, தரணி கடலை ஆகிய ரகங்கள் தா.பழூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கார்த்திகை, மார்கழி மாதங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தை மாத தொடக்கத்தில் நிலக்கடலை விதைப்பு பணிகள் நடைபெற்றன.
வழக்கமான பருவத்தில் விதைக்காமல் இரண்டு மாதங்கள் தாமதமாக விதைக்கப்பட்டதால், நிலக்கடலை பயிரின் வளர்ச்சி குறைந்த அளவே இருந்தது. நிலக்கடலை பயிரை நன்கு வளர வைக்க வேண்டும் என்பதற்காக உரக்கடைகளில் விற்கப்படும் வளர்ச்சி ஊக்கி மருந்துகளை விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தினர். இதனால் வழக்கத்தை விட கூடுதல் செலவு செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. இருந்தபோதிலும் நிலக்கடலை சீரான வளர்ச்சியை எட்டவில்லை.
குறைந்த மகசூல்
வழக்கமாக செடிக்கு சராசரியாக 30 கடலைகள் வீதம் அறுவடை செய்வார்கள். இந்த முறை ஒவ்வொரு செடியிலும் 10 கடலை மட்டுமே வளர்ச்சியடைந்து காணப்பட்டது. மீதமுள்ளவை வளர்ச்சி அடையாமல் பிஞ்சு கடலைகளாக இருந்தன. பிஞ்சு கடலைகள் முற்றட்டும் என்று விட்டால், முற்றிய கடலைகள் முளைக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் மகசூல் குறைந்தபோதும், விவசாயிகள் மிகுந்த வேதனையோடு தொடர்ந்து அறுவடை பணிகளை செய்து வருகின்றனர். ஏக்கருக்கு சுமாராக 30 மூட்டைகள் அறுவடை செய்யக்கூடியவர்கள், இந்த முறை 10 மூட்டைகள் மட்டுமே அறுவடை செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இழப்பீடு வழங்க கோரிக்கை
மேலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் முழுமையாக அறுவடை செய்து விடுவார்கள். இந்தமுறை தாமத விதைப்பு காரணமாக கடும் கோடை வெப்பத்தின் இடையே அறுவடை பணிகள் நடைபெற்று வருவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிலக்கடலை பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளை கணக்கெடுத்து, அவர்களுக்கு அரசிடம் இருந்து உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story