கடலூரில் பெண் ஊழியர் தற்கொலை முயற்சி
கடலூரில் கிராம நிர்வாக அதிகாரி திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றார். அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு அவர், தாசில்தாருக்கு எழுதிய கடிதம் சிக்கி உள்ளது.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் துக்காராம்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 44). இவர் கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் கிராம உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மாரியம்மாள் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார்.
அவர் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி மீது குற்றம் சாட்டி தாசில்தாருக்கு அவர் எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது நாற்காலியை தூக்கி வீசினார்
நான் அலுவலகத்தில் பணிபுரியும் போதே அலுவலகத்தை கிராம நிர்வாக அதிகாரி பூட்டி விட்டு செல்கிறார். இது பற்றி நான் வருவாய் ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தேன். அதன்பிறகு என்னை ஆபாசமாக திட்டினார்.
பிறகு அலுவலகம் மற்றும் பீரோ சாவியையும் வாங்கிக்கொண்டார். வேறு பூட்டு போட்டு பூட்டிவிட்டார். இன்று (நேற்று) அலுவலகம் சென்றேன். என்னை அமர விடாமல் நான் வழக்கமாக அமரும் நாற்காலியை தூக்கி வீசி விட்டார். ஆகவே எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அங்கு வேலை செய்ய விருப்பம் இல்லை. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி தாசில்தார் பலராமனிடம் கேட்ட போது, இந்த சம்பவம் பற்றி புகார் மனு வந்தது. இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்றார். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story