குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு


குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 23 April 2021 2:07 AM IST (Updated: 23 April 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் திடீரென இறந்தார். சிகிச்சை குறைபாடே காரணம் என கூறி பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்;
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் திடீரென இறந்தார். சிகிச்சை குறைபாடே காரணம் என கூறி பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
கர்ப்பிணிக்கு பெண் குழந்தை
தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டை மெயின் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யா(வயது 22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. 
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரண்யா கடந்த 5 நாட்களுக்கு முன்பு தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 
பரிதாப சாவு; உறவினர்கள் போராட்டம்
இந்த நிலையில் சரண்யாவுக்கு சளி அதிகமாக இருப்பதாக கூறி ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், உரிய சிகிச்சை அளித்தும் சரண்யா இறந்து விட்டதாகவும் உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், டாக்டர்கள் கவனக்குறைவாலும் உரிய சிகிச்சை அளிக்காததாலும் சரண்யா இறந்துவிட்டதாக கூறி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சரண்யாவின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வந்ததால் அதை வழிமறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் சரண்யாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மருத்துவ அறிக்கை நகலை கொடுத்தால் உடலை எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பதாக தெரிவித்தனர். அதை கொடுக்க போலீசார் சம்மதம் தெரிவித்தனர்.
நிவாரணம்
 இதுகுறித்து சரண்யாவின் உறவினர்கள் கூறும்போது உடலை எடுத்துச் செல்ல அனுமதி அளித்தாலும் தவறு செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என்றனர். இதுகுறித்து தாசில்தார் பாலசுப்பிரமணியம், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் வருவாய் துறை அலுவலர்களும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story