நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இடமாற்றம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இடமாற்றம்
x
தினத்தந்தி 23 April 2021 2:29 AM IST (Updated: 23 April 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் வருகை அதிகரிப்பையொட்டி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இடமாற்றம் செய்யப்பட்டது.

நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 1-ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோன்று தேர்தல் பணியில் ஈடுபடும் துணை ராணுவத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.

தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்தது. எனினும் விடுபட்ட அரசு அலுவலர்களும், 2-வது கட்ட தடுப்பூசி போடுபவர்களும் பயனடையும் வகையில், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெற கலெக்டர் விஷ்ணு நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதற்கிடையே பல்வேறு இடங்களிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஏராளமான பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு செல்கின்றனர். அங்கு பொதுமக்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மனுநீதி நாள் முகாம் நடைபெறும் கட்டிடத்துக்கு தடுப்பூசி முகாம் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு வருகிற பொதுமக்களை வரிசையாக சமூக இடைவெளியுடன் உட்கார வைத்து தடுப்பூசி போட்டு அனுப்புகின்றனர். கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சுமார் 1,500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story