கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
கடத்தூர்
கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்
கோபி அருகே கொடிவேரி பகுதி உள்ளது. இங்கு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணை பகுதியில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன.
இதில் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் 17 ஆயிரத்து 654 ஏக்கர் நிலமும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் 6 ஆயிரத்து 850 ஏக்கர் நிலமும் என மொத்தம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
விவசாயிகள் கோரிக்கை
இந்த வாய்க்கால்களின் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பெரும்பாலானோர் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி மஞ்சள், வாழை, கரும்பு போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இதில் தடப்பள்ளி வாய்க்காலில் 77 கிலோ மீட்டர் தூரமும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் 32 கிலோ மீட்டர் தூரமும் என 2 வாய்க்கால்களிலும் மேம்பாடு மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் முதல் போகத்துக்காக தண்ணீர் திறந்துவிடக்கோரி அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 22-ந் தேதி முதல் வருகிற ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு
இதைத்தொடர்ந்து கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோபி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி, கொடிவேரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி ஆகியோர் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டனர். அப்போது அணையில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.
இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story