ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தம்


ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 22 April 2021 9:41 PM GMT (Updated: 22 April 2021 9:41 PM GMT)

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தமானது.

ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தமானது.
மாட்டு சந்தை
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 50 கன்று குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த கன்றுக்குட்டிகள் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
450 மாடுகள்
350 பசு மாடுகளும், 100 எருமை மாடுகளும் என மொத்தம் 450 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசுமாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
எருமை மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
விற்பனை மந்தம்
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, ‘கொரோனா தொற்று அச்சம், இ-பாஸ், ஊரடங்கு போன்ற காரணங்களால், வெளி மாநில வியாபாரிகள் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வரவில்லை. தமிழ் நாட்டு வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர்.
வழக்கமாக அதிகாலை 4 மணி முதல் பகல் 10 மணிக்குள் மாடுகள் விற்பனையாகும். நேற்று மதியம் 2 மணி வரை சந்தை நடந்தும் விற்பனை மந்தமாகவே இருந்தது. வெளிமாநில வியாபாரிகள் வராததால் 40 சதவீத மாடுகளே விற்பனையானது. விற்பனையாகாத மாடுகளை, அதன் உரிமையாளர்கள் வேனில் ஏற்றிச் சென்றனர்' என்றனர்.

Next Story