ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் வேறு தேதிக்கு மாற்றப்படும் திருமணங்கள்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக, அன்றைய தினம் நடைபெற இருந்த திருமண விழாக்களை வேறு தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில்தான் பெரும்பாலானவர்கள் திருமணம், புதுமனை புகுவிழா, காதணி விழா போன்ற பல்வேறு விழாக்களை நடத்துவார்கள். அப்போதுதான் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் விழாவுக்கு வருவார்கள் என்று ஏற்பாடு செய்வார்கள்.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கை முன்னிட்டு, பெரும்பாலானவர்கள் அன்றைய தினம் நடைபெற இருந்த திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களையும் வேறு ேததிக்கு மாற்றி வைத்து நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து நெல்லையில் உள்ள மண்டபங்களின் முன்பு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதுதொடர்பாக உறவினர்கள், நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்,
‘கொரோனா பரவல் அதி தீவிரமாக உள்ளதால், விழாக்களை மக்கள் கூட்டமின்றி எளிமையாக நடத்த வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story