போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 30 விமானங்கள் ரத்து
கொரோனா 2-வது அலை காரணமாக போதுமான பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்று வரவேண்டிய 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஆலந்தூர்,
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சீபுரம், கோவை மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் பயணிகள் பலா் தங்களது வெளியூா் பயணங்களை ரத்து செய்து விட்டனா். குறிப்பாக விமான பயணிகள் பலா் தங்களது பயணங்களை தவிா்த்து வருவதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து குறைந்த பயணிகளுடன் விமானங்கள் இயக்கப்படுகிறது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் நேற்று 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதில் 15 விமானங்கள் சென்னையில் இருந்து கோவை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், புவனேஸ்வா், கோவா, இந்தூா், புனே ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ஆகும். அதேபோல் அந்த நகரங்களில் இருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 15 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவைகள் தவிர சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு நேற்று 97 புறப்பாடு விமானங்களும், சென்னைக்கு 98 வருகை விமானங்களும் என 195 விமானங்கள் இயக்கப்பட்டன. அந்த விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. பல விமானங்கள் பயணிகள் இல்லாமல் காலியாகவே இருந்தன.
இதற்கு காரணம் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது. அதோடு விமான நிறுவனங்களும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது, பயணிகளுக்கு கொரோனா ‘நெகட்டீவ்’ சான்றிதழ், இ-பாஸ் அவசியம். அத்துடன் விமானத்தின் நடு இருக்கையில் அமரும் பயணிகள் கவச உடை அணிந்துதான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளிட்ட சில காரணங்களால் பயணிகள் விமான பயணத்தை விரும்பாமல் தவிா்ப்பதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story