ஆண்டிப்பட்டி போலீஸ்நிலையம் முன் ஒலிபெருக்கி உரிமையாளர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
ஆண்டிப்பட்டி போலீஸ்நிலையம் முன் ஒலிபெருக்கி உரிமையாளர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி நகர் சக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 38). ஒலிபெருக்கி நிலையம் வைத்து உள்ளார். சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சேரன்பாண்டியன் என்பவர் ஒலிபெருக்கிகளை வாடகைக்கு வாங்கி, அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஜம்புலிபுத்தூர் அருகே சத்யா நகர் பகுதியில் கட்டி இருந்தார். அப்போது சேரன்பாண்டியன் தேர்தல் விதிகளை மீறி ஒலிபெருக்கி கட்டி இருந்ததாக கூறி அவர் மீது ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேரன்பாண்டியன் வாகன விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து செல்வக்குமார், சேரன்பாண்டியனிடம் பறிமுதல் செய்யப்பட்ட தனது ஒலிபெருக்கிகளை திரும்ப ஒப்படைக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த செல்வக்குமார் நேற்று ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார். பின்னர் அவர் திடீரென போலீஸ் நிலையம் முன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து போலீசார் ஓடிவந்து செல்வக்குமாரை பிடித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். மேலும் அவருடைய ஒலிபெருக்கிகளை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story