வருசநாடு அருகே 50 அடி ஆழ கிணற்றில் குட்டியுடன் தவறி விழுந்த தாய் யானை உயிருடன் மீட்பு


வருசநாடு அருகே  50 அடி ஆழ கிணற்றில் குட்டியுடன் தவறி விழுந்த தாய் யானை உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 23 April 2021 6:43 PM IST (Updated: 23 April 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே 50 அடி ஆழ கிணற்றில் 3 மாத குட்டியுடன் தாய் யானை தவறி விழுந்தது. இந்த 2 யானைகளும் உயிருடன் மீட்கப்பட்டது.

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு வனச்சரகத்தில் அரசரடி மலைக்கிராமம் உள்ளது. இதன் அருகே உள்ள வனப்பகுதியில் வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக வனத்துறை சார்பில் சுமார் 50 அடி ஆழத்துக்கு கிணறு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பி இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் வனப்பகுதியில் இருந்து யானை பிளிரும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இதனையடுத்து அரசரடி மலைக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று காலை 6 மணியளவில் சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் 3 மாத குட்டி யானையுடன் ஒரு பெண் யானை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தது. 
மீட்பு
இதனையடுத்து பொதுமக்கள் கயிறு மூலம் குட்டி யானையை மீட்டனர். பின்னர் தாய் யானையை மீட்பதற்கு கிணற்றுக்குள் பெரிய மரக்கட்டைகளை ஏணி போல அடுக்கி வைத்தனர். ஆனால் இரவு முழுவதும் தண்ணீரில் நீந்தி சோர்வடைந்த நிலையில் இருந்ததால் தாய் யானையால் மேலே ஏற முடியவில்லை. பின்னர் மீட்பு பணிக்காக கிணற்றின் ஒரு பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவரை பொதுமக்கள் இடித்து அகற்றினர். இதனால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தாய் யானை மெல்ல கிணற்றில் இருந்து வெளியேற தொடங்கியது. 
இதனிடையே தாய் யானை ஆக்ரோஷத்துடன் இருக்கும் என்பதால் குட்டி யானையை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு  பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
தவித்த குட்டி யானை
இந்தநிலையில் காலை 9 மணியளவில் கிணற்றில் இருந்து வெளியே வந்த தாய் யானை குட்டி யானையை விட்டு விட்டு வனப்பகுதிக்குள் ஓடிச்சென்றது. இதனால் குட்டியானை மட்டும் தன்னந்தனியாக தவித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வருசநாடு வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் குட்டி யானையை பிடித்து கயிறு மூலம் அருகே உள்ள மரத்தில் கட்டி வைத்து அதற்கு உணவு வழங்கினர். கால்நடை மருத்துவரை வரவழைத்து குட்டி யானையின் உடலை பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் குட்டி யானைக்கு காயங்கள் உள்ளிட்ட எந்த பிரச்சினையும் இல்லை என தெரியவந்தது. அந்த குட்டியானையை வனப்பகுதிக்குள் விட்டாலும் அது மீண்டும் கிணற்றருகே ஓடி வந்தது. மேலும் அது தொடர்ந்து பிளிறிக் கொண்டே இருந்தது. இதனால் குட்டி யானையின் பிளிறல் சத்தம் கேட்டு தாய் யானை அங்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் வனத்துறையினர் இருந்தனர். ஆனால் குட்டி யானையை தேடி தாய் யானை வரவில்லை.
தாயுடன் சேர்ந்தது
பின்னர் வனத்துறையினர் யானைகளின் வழித்தடத்தை ஆய்வு செய்து அதன் வழியாக குட்டி யானையை சங்கிலியால் கட்டி வனப்பகுதிக்குள் அழைத்து சென்றனர். வனப்பகுதிக்குள் சுமார் அரைகிலோமீட்டர் சென்ற நிலையில் குட்டியானையின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு நின்ற தாய் யானை பாசத்தில் பிளிறியது. 
இதையடுத்து வனத்துறையினர் குட்டியானையின் சங்கிலியை அவிழ்த்து விட்டனர். அது உடனே ஓடிச்சென்று தாய் யானையுடன் சேர்ந்து கொண்டது. பின்னர் வனத்துறையினர் அங்கிருந்து திரும்பினர். 


Next Story