பாட்டில் குண்டு வீசி 10 வாகனங்களை அடித்து நொறுக்கிய சிறுவர்கள்
தகராறு செய்த போது பெண்கள் விரட்டியதால் ஆத்திரம் அடைந்த சிறுவர்கள், பாட்டில் குண்டு வீசி, 10 வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மதுரை, ஏப்
தகராறு செய்த போது பெண்கள் விரட்டியதால் ஆத்திரம் அடைந்த சிறுவர்கள், பாட்டில் குண்டு வீசி, 10 வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
விரட்டிய பெண்கள்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் 1-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் அருகே கடந்த 21-ந் தேதி, 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சிலர் நின்றுள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்த நாய் அவர்களை பார்த்து குரைத்துள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த சிறுவர்கள் அந்த நாயை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அந்த வீட்டில் இருந்த பெண் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அந்த பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து அந்த சிறுவர்களை அங்கிருந்து விரட்டியதாக கூறப்படுகிறது.
வாகனங்களை அடித்து நொறுக்கினர்
இது அந்த சிறுவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று அதிகாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் 6 சிறுவர்கள் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு அந்த பகுதிக்கு வந்தனர்.
போதையில் இருந்த அவர்கள் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிசரக்கு வேன், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள் என 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள்.
பாட்டில் குண்டு வீச்சு
பின்னர் அவர்கள் நாய் குரைத்த வீட்டின் மீது பாட்டிலில் மண்எண்ணெயை நிரப்பி தூக்கி வீசியுள்ளனர். ஆனால், அந்த பாட்டில் குண்டு வெடிக்காமல் உடைந்து சிதறியது.
இந்த சம்பவத்தால் பயந்து அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம்பக்கத்தினரையும் அந்த சிறுவர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி சத்தம் போட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சேதம் அடைந்த வாகனத்தின் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
வலைவீச்சு
அந்த புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சிறுவர்களை தேடி வருகிறார்கள்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது, “அந்த பகுதியில் சிறுவர்கள் இரவு நேரத்தில் சில இடங்களில் ஒன்று கூடி போதையில் தகராறு செய்கிறார்கள். அவர்களை தட்டிக்கேட்டால் இது போன்ற சம்பவம் நிகழ்கிறது. எனவே இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story