கொரோனா சிகிச்சை மையமாக தனியார் பள்ளி மாற்றம்
ஊட்டியில் கொரோனா சிகிச்சை மையமாக தனியார் பள்ளி மாற்றப்பட்டு உள்ளது. அங்கு 90 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 420 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா சிகிச்சை மையமாக ஊட்டி இளைஞர் விடுதி மாற்றப்பட்டு, 90 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஊட்டியில் பெர்ன்ஹில் பகுதியில் உள்ள தனியார் பள்ளி, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து நோயாளிகள் இருக்கும் அறைகள், கழிப்பறை, ஜன்னல், கதவுகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். அறை வாரியாக படுக்கைகள் போடப்பட்டு உள்ளது.
நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு நேற்று முதல் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் தனியார் பள்ளிகள், மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story