கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம்:
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் செல்ல அரசு தடை விதித்து உள்ளது. தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக மேகமலை உள்ளது. இதன் இயற்கை அழகை ரசிக்க வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு மகராஜா மெட்டு, ஹைவேவிஸ் போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பேனர் தென்பழனி வனத்துறை சோதனைச்சாவடியில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அரசு ஊழியர்கள், மலைக்கிராம மக்கள் மற்றும் விவசாய பணிகளில் ஈடுபடுபவர்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. சுற்றுலாபயணிகள் சென்று வர அனுமதி இல்லை. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான வைகை அணை, சுருளி அருவி, கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story