காட்டுயானை, சாதுவான குணத்துக்கு மாறியது
சேரம்பாடியில் 2 பேரை கொன்ற காட்டுயானை, சாதுவான குணத்துக்கு மாறியது. மரக்கூண்டில் அடைத்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பந்தலூர் தாலுகாவில் உள்ள சேரம்பாடியில் ஆனந்தராஜ் உள்பட 2 பேரை காட்டுயானை தாக்கி கொன்றது.
எனவே அந்த காட்டுயானையை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி அந்த காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் முதுமலை புலிகள் காப்பக அபயாரண்யம் முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
பின்னர் சில நாட்கள் மரக்கூண்டில் காட்டுயானை ஆக்ரோஷமாக காணப்பட்டது. தொடர்ந்து அதற்கு தீவனம் வழங்கி பாகன்கள் பராமரித்து வந்தனர். மேலும் அந்த காட்டுயானையை சாதுவான குணத்துக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டனர். சுமார் 2½ மாதங்களுக்கு பிறகு தற்போது சாதுவான குணத்துக்கு மாறிவிட்டது.
கும்கியாக மாற்றப்படும்
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வழக்கமாக காட்டுயானைகளை பிடித்து மரக்கூண்டில் அடைத்து வைத்தால், அடுத்த சில நாட்களுக்கு ஆக்ரோஷமாக காணப்படும். மேலும் பராமரிக்கும் பாகன்களை தாக்க முயலும்.
தற்போது சேரம்பாடியில் பிடிக்கப்பட்ட காட்டுயானை சாதுவான குணத்துக்கு மாறிவிட்டது. பாகன்களிடம் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது இல்லை. இன்னும் சில வாரங்கள் கூண்டில் வைத்து பராமரிக்கப்படும். அதன்பிறகு கும்கியாக மாற்ற வெளியே கொண்டு வரப்படும் என்றனர்.
Related Tags :
Next Story