ஆறுமுகநேரி அருகே அரசு ஊழியர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா
ஆறுமுகநேரி அருகே அரசு ஊழியர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே அரசு ஊழியர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல்
ஆறுமுகநேரி பகுதிக்கு சென்னை, கோவை, பெங்களூர், மும்பை, போன்ற நகரங்களில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டு வந்து கொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் இப்பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற பேராசிரியர், தொழிலாளி, தொழிலதிபர் என தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு ஊழியர் குடும்பத்தினர்...
இந்த நிலையில் நேற்று ஆறுமுகநேரி அருகிலுள்ள கீழநவ்வழடிவிளையில் மீன் வியாபாரி ஒருவருக்கும், அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவரது வீட்டிற்கு எதிரே வசிக்கும் அரசு ஊழியர், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் என 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், பெரியான்விளையில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் கோவையிலிருந்து சில நாட்களுக்கு முன்பு வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் செட்டியார் தெருவில் உள்ள ஒருவருக்கும், தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் மூதாட்டி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆக மொத்தமாக நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காய்ச்சலுக்கு சிகிச்சை
மேலும் ஆறுமுகநேரி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி இப்பகுதியில் விரைவாக காய்ச்சல் பரிசோதனை, கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தடுப்புகளால் அடைப்பு
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கீழநவ்வலடிவிளையில் 6 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அந்த தெரு நுழைவு வாயில் தடுப்புகளால் அடைக்கப்பட்டுளது
இந்த பகுதியில் ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் மகராஜன், நகர பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திக், மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வேறு யாரும் சென்று விடாதவாறு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story