மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
விருத்தாசலம் அருகே தொரவளூர் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தொரவலூர், பரவலூர், முகுந்தநல்லூர், பெரம்பலூர், கோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் சாகுபடி செய்து, அறுவடை செய்த நெல்லை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 30-ந்தேதி வரை மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதையறிந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை மூட கால அவகாசம் வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஏப்ரல் 15-ந்தேதி வரை கொள்முதல் நிலையம் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்லை விற்பனைக்காக குவியல் குவியலாக நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில் குவித்து வைத்துள்ளனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இதனிடையே கடந்த 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் சாக்கு இல்லை எனக்கூறி நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகம் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யவில்லை. மேலும் மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதால் நெல் கொள்முதல் பணிகள் நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த 15-ந்தேதிக்கு பிறகு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாது என கூறிவிட்டு அங்கிருந்த அதிகாரிகள் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச்செயலாளர் நீதி வள்ளல் தலைமையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தொரவளூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்காததை கண்டித்தும், மூடப்பட்ட கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, இப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story