கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தட்டுப்பாடு இல்லை 90 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அதிகாரி தகவல்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 90 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இல்லை என மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
கொரோனா வைரஸ்
கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய படுக்கை வசதி மற்றும் ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 ஆயிரம் லிட்டர் திரவ மருத்துவ ஆக்சிஜன் தொட்டி பொருத்தப்பட்டது. இதில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமின்றி, மகப்பேறு போன்ற முக்கிய சிகிச்சைகள் அளிப்பதற்கும் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 140 சிலிண்டர்கள் வரை நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
தட்டுப்பாடு
இந்நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுபோல் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் பரவியது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சாய்லீலா கூறுகையில், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது உள்ள ஆக்சிஜன் சுமார் 5 நாட்களுக்கு போதுமானதாக உள்ளது. தேவைப்படும் போது ஆக்சிஜன் நிரப்பப்பட்டு, நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆஸ்பத்திரியில் 91 ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட 90 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இதுவரை இல்லை என்றார்.
Related Tags :
Next Story