வீட்டில் இருந்து ஆசிரியர்கள் பணி செய்ய அரசு உத்தரவிட வேண்டும்
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கல்லூரி பேராசிரியர்களைபோல பள்ளி ஆசிரியர்களும் வீட்டில் இருந்தே பணி செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது.
ராமநாதபுரம்,
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கல்லூரி பேராசிரியர்களைபோல பள்ளி ஆசிரியர்களும் வீட்டில் இருந்தே பணி செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது.
2-வது அலை
ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-ம் அலை மிக வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரி களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மே மாதம் நடக்க இருந்த பிளஸ்-2 அரசு பொது தேர்வையும் தள்ளி வைத்துள்ளது. செய்முறை தேர்வு முடிவடைந்து உள்ளது. கொரோனா தொற்று மாணவர்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் சிறப்பு வகுப்புகள் யாருக்கும் எடுக்கக்கூடாது என்று அரசு கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி என ஏற்கனவே அரசு அறிவித்து அவர்கள் அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் ஆசிரியர்கள் உதவியுடன் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுக்கு தயாராகும் வகையில் படித்தல் விடுமுறை விடப்பட்டு வீட்டில் இருந்தே படித்து வருகின்றனர்.
உத்தரவு
பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களின் வீட்டில் இருந்து பஸ் மூலம் பள்ளிக்கு கொரோனா அச்சத்துடன் சென்று வருகின்றனர். பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரவும் என்று விடுமுறை அறிவித்த அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஆனால், கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் தங்களின் வீட்டில் இருந்தே கல்விப் பணி செய்யலாம் என கூறியுள்ளது. கல்லூரி பேராசிரியர்களின் நலனை காக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களின் நலனையும் கருதி வீட்டில் இருந்தே கல்விப் பணி செய்யலாம் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Related Tags :
Next Story