முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி டாக்டருக்கு கொரோனா நர்சு ஒருவருக்கும் தொற்று உறுதியானது
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி டாக்டா் மற்றும் நா்சுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விக்கிரவாண்டி,
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. டாக்டர்கள், நர்சுகள் என மருத்துவ துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தொற்று தடுப்பு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். முன்கள பணியாளர்களான இவர்களில் சிலரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில், நேற்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 36 வயதுடைய பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 25 வயதுடைய நர்சு ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் இருவரும் மருத்துவமனை குடியிருப்பில் தங்கி இருந்தவர்கள் ஆவார்கள். தங்களது குடியிருப்புகளில் இருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்த கோபாலகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வங்கி ஊழியா்
விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
ஊழியருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, நேற்று காலை 10.30 மணிக்கு வங்கி பணிகள் நிறுத்தப்பட்டு, கிளை மூடப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில் ஊராட்சி பணியளார்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வருகிற 26-ந்தேதி( திங்கட் கிழமை) முதல் வங்கி வழக்கம் போல் இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story