புதிய பூ மார்க்கெட்டில் கடைகள் தற்காலிகமாக திறப்பு
புதிய பூ மார்க்கெட்டில் கடைகள் தற்காலிகமாக திறப்பு
கோவை
கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இங்கு அதில் 140-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கோவை தொண்டாமுத்தூர், காரமடை, பொள்ளாச்சி மட்டுமின்றி சத்தியமங்கலம், சிறுமுகை, பெங்களூரு, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு நாள்தோறும் 20 டன் முதல் 30 டன் பூக்கள் விற்பனைக்கு வருகின்றது. மேலும் இந்த பூக்கள் கேரளாவிற்கும் அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் பழைய பூ மார்க்கெட்டில் இடப்பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் மாநகராட்சி சார்பில் ரூ.70 லட்சம் செலவில் மலர் அங்காடியில் புதிதாக 95 கடைகள் கட்டப்பட்டன.
இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து, கடைகள் திறக்க தயார் நிலையில் உள்ளது. இந்த கடைகள் ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு ஒதுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கோவை மாவட்டத்தில் நாள்தோறும் 600 பேர் முதல் 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க புதிய மார்க்கெட்டை தற்காலிகமாக திறக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து பழைய பூமார்க்கெட்டில் இருந்து 50 சதவீத கடைகள் புதிய பூ மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அங்கு வியாபாரிகள் தங்களது கடைகளை திறந்து பூக்களை விற்பனை செய்தனர்.
முதல்நாள் என்பதால் குறைந்த அளவிலான பொதும க்களே பூக்கள் வாங்க வந்தனர். இதனால் அங்கிருந்த வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பழைய பூ மார்க்கெட்டில் இருந்த கடைகளில் 50 சதவீதம் புதிய மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பழைய மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.
கொரோனா தொற்று அபாயம் நீங்கும் வரை இந்த புதிய மார்க்கெட்டில் கடைகள் தற்காலிகமாக செயல்படும். இதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story