நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற விவசாயி
பொள்ளாச்சி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை விவசாயி கொன்றார். அரிவாளால் வெட்டியும் சாகாததால் கழுத்தை நெரித்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை விவசாயி கொன்றார். அரிவாளால் வெட்டியும் சாகாததால் கழுத்தை நெரித்தார்.
பெற்றோர் வீட்டிற்கு சென்றார்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டா முத்தூரை சேர்ந்தவர் லட்சுமராஜ் (வயது 36). விவசாயி. இவரது மனைவி சரண்யா (26). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. லோகேஸ் (5) என்கிற மகன் உள்ளார்.
இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக லட்சுமராஜிக்கும், சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் அவர் கோபித்துக் கொண்டு சீலக்காம்பட்டி மலையாண்டிபட்டிணத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
மீண்டும் தகராறு
இந்த நிலையில் லட்சுமராஜ் மாமனார் வீட்டிற்கு சென்றார். பின்னர் சமரசம் பேசி அங்கிருந்து தனது மனைவியை தொண்டாமுத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இதற்கிடையில் நள்ளிரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் லட்சுமராஜிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரண்யாவை வெட்டினார்.
கழுத்தை நெரித்து கொலை
அப்போது அவர் தடுத்ததால் இடதுகையில் வெட்டு விழுந்தது. மீண்டும் அவரை வெட்டியபோது தடுத்ததால் மற்றொரு கையில் வெட்டுபட்டது. அவர் லட்சுமராஜின் கையில் இருந்த அரிவாளை தட்டிவிட்டார்.
மேலும் அவருக்கு ரத்தம் அதிகமாக வெளியேறியதால் கீழே சரிந்தார். அப்போது லட்சுமராஜ் கொடூரமாக தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் தூங்கிக்கொண்டு இருந்த தனது மகனை எழுப்பி தன்னுடன் அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கோட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தலைமறைவான லட்சுமராஜை தேடினார்கள்.
கைது செய்தனர்
மேலும் கோட்டூர் போலீசார் தொண்டாமுத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சிறுவனுடன் நடந்து வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர் லடசுமராஜ் என்பதும், தனது மனைவி சரண்யாவை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவன் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story