தரமில்லாத பாதாள சாக்கடை திட்ட பணிகள்


தரமில்லாத பாதாள சாக்கடை திட்ட பணிகள்
x
தினத்தந்தி 23 April 2021 11:36 PM IST (Updated: 23 April 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகரில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

பாதாள சாக்கடை திட்டம் 

பொள்ளாச்சி நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. இந்த நிலையில் நகராட்சி பகுதிகளில் ரூ.170 கோடியே 12 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 

நகர பகுதிகளில் சேகரிக்கும் கழிவுநீரை சுத்திகரித்து அனுப்பும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாட்டு சந்தை பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 

இந்த பணிகளுக்காக ஆங்காங்கே ஆள்இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

விபத்து ஏற்படுவதால் அச்சம் 

இந்த குழிகள் தரமில்லாமல் அமைக்கப்படுவதால் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே பழுதடைந்து விட்டன. பொள்ளாச்சி ஊத்துக்காடு ரெயில்வே கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகில் அமைக்கப்பட்ட ஆள்இறங்கு குழி சேதமடைந்து, அதன் மூடி மேல்நோக்கி தூக்கி கொண்டிருந்தது. 

அதன் மீது  அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாதாள சாக்கடை திட்ட பணிகளால் தொடர்ந்து விபத்து நடைபெறுதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாதாள சாக்கடை திட்ட பணிகள் தரமில்லாமல் அமைக்கப் படுவதால் 200 ஆள்இறங்கு குழிகள் சேதமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குழிகள் மீது சரக்கு வாகனங்கள் ஏறி இறங்கினால் சேதமடைந்து விடுகின்றன. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். 

எனவே தரமில்லாமல் அமைக்கப்பட்ட ஆள்இறங்கு குழிகள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story