செண்பகராமன்புதூர் அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகை
செண்பகராமன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் பழுதடைந்த எக்ஸ்ரே எந்திரத்தை சரி செய்யாததால் பொதுமக்கள் திடீரென ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆரல்வாய்மொழி,
செண்பகராமன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் பழுதடைந்த எக்ஸ்ரே எந்திரத்தை சரி செய்யாததால் பொதுமக்கள் திடீரென ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அரசு ஆஸ்பத்திரி
செண்பகராமன்புதூரில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த ஆஸ்பத்திரியால் சுற்று வட்டார 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் பலனடைந்து வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு கடந்த 3 மாதமாக எக்ஸ்ரே எந்திரம் பழுதடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதுசம்பந்தமாக வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். யாருக்கும் எக்ஸ்ரே எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் செண்பகராமன்புதூர் இலந்தை நகரை சேர்ந்த அனுஷா (வயது 27) என்ற இளம்பெண் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எலும்பு முறிவை எக்ஸ்ரே எடுத்து பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். ஆனால் வரும்போதெல்லாம் எக்ஸ்ே்ர எந்திரம் பழுதடைந்துள்ளது என கடந்த 2 மாதமாக அவர் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முற்றுகை போராட்டம்
இந்தநிலையில் நேற்றும் அனுஷா ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அப்போதும் இதே பதிலை டாக்டர்கள் தெரிவித்துள்னர். இதுகுறித்து அனுஷா செண்பகராமன்புதூர் ஊராட்சி தலைவர் கல்யாண சுந்தரத்திடம் கூறியுள்ளார். உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு வந்து இதுசம்பந்தமாக டாக்டரிடம் கேட்டுள்ளார். அதற்கு சரியான பதில் இல்லாததால் ஊராட்சி தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில், துணைத் தலைவர் தேவதாஸ், பாதிக்கப்பட்ட நோயாளி மற்றும் பொதுமக்கள் ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து ஆஸ்பத்திரி டாக்டர் ஜோஸ்வா, ஊராட்சி தலைவர் கல்யாண சுந்தரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story